இணைய ஊடகங்களான "புதினம்" மற்றும் "தமிழ்நாதம்" ஆகியன நிறுத்த வைக்கப்பட்ட நிகழ்வு - ஒரு வரலாற்றுத் துயரம்தான்.
ஈழத்தமிழரின் போராட்ட வாழ்வில் இதுவும் ஒரு பரிமாணத்தில் பின்னடைவுதான்.
தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமல்லாது - உலக இராஜதந்திர வட்டாரங்கள், அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், முன்னணிப் புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக ஊடகத்துறையினர் மத்தியிலேயும் கவனத்தை ஈர்த்திருந்த - நம்பகத் தன்மையான ஈழத்தமிழர்களின் குரல் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருந்த - "புதினம்" தளம் மூட வைக்கப்பட்டதானது -
தமிழர்களுக்குள் குருட்டு நம்பிக்கைகளை வளர்த்து, நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைக் காணவைத்து, தமிழினத்தைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்க முயலுகின்ற நேர்மையற்றவர்களின் சதி.
தமிழர்களிடம் உண்மை சென்றடைவதைத் தடுக்க முயல்வோர் புரிந்து வரும் தொடர் அடாவடித்தனத்தின் உச்சம் தான் இது.
ஆனால் - உண்மையினதும் சத்தியத்தினதும் பலத்தில் நின்று, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி - துணிவுடனும் இறுமாப்புடனும் சேவையாற்றுபவர்கள் இந்தச் சலசலப்புக்களுக்கு எல்லாம் அச்சமுறுவதோ அல்லது பணிந்து போவதோ கிடையாது.
"புதினம்" தளத்தின் பல்துறை பங்காளர்களாகிய நாங்கள் - அதன் செய்தியாளர்களினதும் மற்றும் அதன் ஆர்வலர்களினதும் துணையுடனும், சமூக அக்கறை கொண்டவர்கள் பலரினது ஒத்துழைப்புடனும் "புதினப்பலகை" [
www.puthinappalakai.com ] [
www.TamilNewsBoard.com ] என்ற இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ளோம்.
சுருக்கமாக -- புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கும் தளத்தின் புதிய பெயர் தான் "புதினப்பலகை."
செய்திகளில் நம்பகத்தன்மையையும், அவற்றை வெளியிடுவதில் தனித்துவத்தையும், ஊடகவியலில் ஒரு தரத்தையும் "புதினம்" தளத்தில் பேணிய நாங்கள் - அதே நம்பகத் தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் "புதினப்பலகை"யிலும் தொடர்ந்தும் பேணுவோம்.
தமிழ் பேசும் மக்களின் "நலன்" மட்டும் தான் என்றென்றும் "புதினம்" தளத்தின் இலக்காக இருந்து வந்தது. அந்த இலக்கை மட்டுமே குறியாக வைத்துத் தான் நாம் எப்போதும் இயங்கி வந்தோம்.
ஆனால் - மே 2009 வரையான காலத்தில் தமிழ் பேசும் மக்களின் "நலனும்" தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலட்சியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புற்று இருந்ததால் - "புதினம்" தளமானது - விடுதலைப் புலிகளின் "ஊதுகுழல்" என ஒரு சாராராலும், அவர்களது "அதிகாரபூர்வத் தளம்" என இன்னொரு சாராராலும் கருதப்பட்டு வந்தது.
மே 2009 - க்குப் பின்னான காலத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகவே செயலிழக்கச் செய்யப்பட்ட போதும் - "புதினம்', எப்போதும் போல, தமிழ் பேசும் மக்களின் "நலன்" என்ற இலக்கு நோக்கியே தொடர்ந்தும் இயங்கி வந்தது.
மே 2009 - க்குப் பின்னான அந்தக் காலத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்த பகுதி தன்னை ஒரு சுய மீளாய்வுக்கு உட்படுத்திய போது - "புதினம்", எப்போதும் போல, தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் "நலனை" மட்டுமே முன்னிறுத்தி அவர்களிடம் உண்மையைக் கொண்டு சென்றது.
ஆனால் - அதுவே பின்பு பெரும் சர்ச்சையாகி, ஒரு வகையில் "துரோகம்" எனவும் ஆகி, பழிச்சொல்லுக்கும் உள்ளாகி - கடைசியில், ஆயுதங்களற்ற வன்முறைக்கும் இலக்காகிய போது - "தனிப்பட்ட காரணங்களினால்" என அறிவித்துவிட்டு "புதினம்' தளத்தின் பழைய நிர்வாகம் அதனை இழுத்து மூடும் நிலைக்கும் வந்தாகியது.
"புதினம்" தளத்தை மீள இயக்குவதற்கு நாம் எடுத்த எந்த முயற்சியும் கைகூடாது போன பின்னணியில் - அதன் பெயரிலும் அதே வடிவத்திலும் புதுத் தளம் தொடங்கி அதன் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும், உயர் தரத்தையும் மாசுபடுத்த சிலர் முயன்றுள்ள சூழ்நிலையில் - புதிய நிர்வாகத்தின் கீழ் - "புதினப்பலகை" என்ற புதிய பெயரின் கீழ் இயங்கத் தொடங்குவதற்கு "புதினப்பலகை குழுமம்" ஆகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
"புதினப்பலகை" தமிழ் பேசும் மக்களுடன் என்றென்றும் இணைந்திருந்து - உண்மையை மட்டுமே அவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
இலங்கைத் தீவிலும், தமிழ்நாட்டிலும், உலகப்பரப்பு எங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களதும், தமிழரல்லாத தமிழர் நலன் விரும்பிகளதும், மற்றும் அனைத்துலக சமூகத்தாரினதும் - ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் "புதினப்பலகை" பணியாற்றும்.
தமிழ் சமுகத்தின் இயல்புகளான - உள்வாங்கும் சுபாவம், திறந்தமனப் பக்குவம், ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் என்பவற்றை வளர்த்தெடுக்கும் ஒரு தளமாகவும், அவற்றுக்கு வலுச்சேர்த்து, அவற்றைத் தமிழரது வாழ்வியல் பண்பாடாக மாற்ற முயல்வோருக்கான ஒரு களமாகவும் "புதினப்பலகை" விளங்கும்.
உலக வரலாற்றை நகர்த்திய ஏனைய தேசிய இனங்களின் பட்டறிவுகளைப் பரிமாறி, உலகின் செல்நெறி பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்று - அவற்றுக்கு அமைவாக - ஈழத்தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் ஈழத்தமிழரது அரசியல் முன்முனைவுகளுக்கும் "புதினப்பலகை" துணையாய் இருக்கும்.
'அறிதல், தெளிதல், துணிதல்' என்பவதுவே "புதினப்பலகை"யின் இயங்கு மையம்; தாரக மந்திரம்.
உண்மையை அறிய வைத்து, ஐயங்களைத் தெளிய வைத்து, செயற்படும் துணிவை ஊட்டி -- தமிழ்த் தேசிய இனத்தை "புதினப்பலகை" ஒரு நேரிய பாதையில் தொடர்ந்தும் அழைத்துச் செல்லும்.
நன்றி.