அனைத்துலக நிபுணர்குழு அடுத்தவாரம் கொழும்புக்கு பயணம் ^சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான் ^கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளை பெருநிலப்பரப்புக்கு கொண்டு செல்கிறது அவுஸ்ரேலியா ^ஐ.நா குழுவுக்கு நுழைவிசைவு: மோடிக்கு ஜெயலலிதா கடிதம் - கோவையில் உருவபொம்மை எரிக்க முயற்சி ^ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்கா அரசுக்குள் பிளவை ஏற்படுத்தும் – கொழும்பு ஊடகம் ^மகிந்தவுக்கு எதிரான பொதுவேட்பாளர் – இணக்கத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் ^இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம் ^சிறிலங்காவில் சீனத் தலையீடு குறித்து இந்தியா கவலை - பிரிஐ ^ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில் ^பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறராம் மகிந்த – பீரிஸ் கடிதம் ^
இன்றைய செய்திகள்
வியாழன், 24-07-2014
புதன், 23-07-2014
செவ்வாய், 22-07-2014
திங்கள், 21-07-2014
ஞாயிறு, 20-07-2014
சனி, 19-07-2014
வெள்ளி, 18-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்
இந்தியாவின் புதிய அரசாங்கம் யதார்த்தமான, முற்போக்கான அரசாங்கம் என்பதால், ஜெனிவாவில் சிறிலங்கா விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்  என்று பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்காவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வழங்கிய ஆலோசனை – நோர்வே தூதுவர் அதிர்ச்சி
நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். [விரிவு]
சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்பந்தன் பதில்
சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி,  தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். [விரிவு]
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிட முடியாது – பாஜக கொள்கை வகுப்பாளர் சாரி
கொழும்புக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டு விவகாரமாகும்.  இந்தப் பிரச்சினைகளை அனைத்துலக மயமாவதற்குப் பதிலாக, கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையிலேயே சிறந்த முறையில் தீர்க்க முடியும். [விரிவு]
இந்திய – சிறிலங்கா உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினைகளையும் துண்டிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு முன்னரை விடவும், ஆதரவாக இந்தியா செயற்படும் என்று, பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். [விரிவு]
'பதுங்கு குழிகளும் காப்பரண்களும் நிறைந்துகிடந்த இந்த பகுதிகளில் தற்போது வர்த்தகம் புதுவேகம் கொள்கிறது' - சிங்கள ஊடகம்
[ வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2010, 19:25 GMT ] [ தி.வண்ணமதி ]

ஒரு வருடத்தின் முன்னர் போர் முடிவுக்கு வந்தது. நாட்டினது வட பகுதிதான் ஆயிரக் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இறுதிப் போரின் வடுக்களைத் தன்னகத்தே தாங்கி நிக்கிறது.

இப்போது, வடக்கு தனக்கான பயன்களை மெதுவாகப் பெறுவதற்கு ஆரம்பித்திருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக பெருமளவிலான நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்பதற்கு அப்பால், தெற்குக்கும் வடக்குக்குமான பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான இடைத்தொடர்புகள் அதிகரிக்கும் என்பதை நாம் மறுக்கமுடியாது.

இவ்வாறு சிங்கள ஊடகமான 'PERAMBARA' வெளியிட்டுள்ள சுற்றுப்பயணக் கட்டுரை தெரிவிக்கின்றது. அந்த ஊடகத்தின் செய்தியாளர்களான Dinidu de Alwis, Indi Samarajiva, Arthur Wamanan and Charles Peter ஆகியோர் வடக்கு கிழக்கிற்கு சுற்றுப்பயணம் செய்து கண்டும் கேட்டும் எழுதியவற்றின் விபரணத் தொகுப்பாகும்.

இதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

45 வயதான சகாதேவனைப் பொறுத்தவரையில் அவருக்கு இரண்டு வகையான மாற்றங்கள் தற்போது ஏற்பட்டிருக்கின்றன.

முதலாவது, கிளிநொச்சி நகரத்தினை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலத்தில் இருந்ததைப் போலல்லாமல் இப்போது இவரது வியாபார நிலையத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

இரண்டாவதாக, தனது வியாபாரம் எந்த வகையினைச் சார்ந்தது மற்றும் அது தொடர்பாக சட்ட ரீதியான வரையறைகள், கட்டுப்பாடுகள் என்ன என்பதைச் சகாதேவன் அறிய முனைகிறார்.

'கிளிநொச்சி நகரத்தினை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலப்பகுதியில், உயர் வரியினை நாங்கள் கட்டவேண்டியிருந்தது, அவர்கள் அழைக்கும் போதெல்லாம் எங்களது வியாபார நிலையங்களை மூடிவிட்டு நாங்கள் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும். இல்லையேல், கடுமையான தண்டனையினை எதிர்கொள்ள நேரும்' என சகாதேவன் கூறுகிறார்.

தற்போது அனைவரதும் கவனத்தினைப் பெற்றிருக்கும் கிளிநொச்சி நகரத்தின் மத்தியிலிருக்கும் உடைத்து விழுத்தப்பட்ட தண்ணீர்தாங்கிக்கு அருகே சகாதேவன் தனது வியாபார நிலையத்தினை நடாத்தி வருகிறார்.

போரின் இறுதி நாட்களில் கிளிநொச்சி நகரின் மத்தியிலிருந்த இந்தத் தண்ணீர் தாங்கியினை விடுதலைப் புலிகள் தகர்த்திருந்தார்கள். அளவில் பெரிய இந்தத் தண்ணீர்தாங்கியினைத் தகர்ப்பதற்காக அவர்கள் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தினைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

உடைந்து விழுந்த தண்ணீர் தாங்கியில் படையினர் தங்களது பெயர்களையும் தாம் சார்ந்த படையணியின் விபரத்தினையும் கோணல் மாணலாக எழுதியிருக்கிறார்கள்.

ஏ9 வீதியின் ஊடாக குடாநாட்டுக்குப் பயணம் செய்யும் தென்பகுதிச் சிங்கள உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இடமாக இந்தப் பகுதி மாறியிருக்கிறது.

உடைந்து விழுந்த இந்தத் தண்ணீர் தாங்கியின் அருகே நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று இருக்கிறது.

கட்டத்தின் ஒரு பகுதி சிதைந்து போயுள்ளது. ஆனால், இந்தத் கட்டடத்திலும் தண்ணீர் தாங்கியைச் சுற்றியுள்ள நிலத்திலும் சிறு சிறு வியாபார நிலையங்கள் முளைத்திருக்கின்றன.
உடைந்துவிழுந்த தண்ணீர் தாங்கியினைப் பார்க்க வரும் சிங்கள உல்லாசப் பயணிகளே இவர்களின் வாடிக்கையாளர்கள்.

கிளிநொச்சி நகரத்திலுள்ள சந்தையில் இனிப்புக்கள் முதல் சண் கிளாஸ் வரை அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தச் சந்தையில் சகாதேவன் பலசரக்குக் கடையொன்றை வைத்திருக்கிறான்.

'நாங்கள் எமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான இடம் தேவை' எனக் கூறுகிறார் சகாதேவன். 'நிரந்தரக் கட்டடங்கள் இருக்குமெனில் வியாபாரிகளான எமக்கும் மக்களுக்கும் அது வசதியாக இருக்கும்' என அவர் தொடர்ந்தார்.

நகரின் சந்தைக்கு நிரந்தரக் கட்டங்கள் தேவை என்ற வியாபாரிகளின் கருத்துத் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டோம்.

கிளிநொச்சி நகரினை அண்டியிருக்கும் அம்பாள்குளம் பகுதியில் சந்தைக்கான நிரந்தரக் கட்டங்களை நிர்மானிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

கிளிநொச்சிச் சந்தைக்கான புதிய கட்டட நிர்மானப் பணிகள் நிறைவடைந்தவுடன் வர்த்தக நடவடிக்கைகள் இலகுவாகும் என்கிறார் அரசாங்க அதிபர்.

சகாதேவனைப் போல 17 வயதுடைய பிரசாத் என்ற இளைஞன் சந்தையில் சிறு வியாபாரம் செய்கிறான். மீள்குடியேற்ற உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட 25,000 ரூபாவினை முதலாகக் கொண்டு அவன் இந்த வியாபாரத்தினை ஆரம்பித்திருக்கிறான்.

'எனது தாயார்தான் முன்னர் சந்தையில் வியாபாரம் செய்தார். ஆனால் அவர் சுகவீனமுற்றிருப்பதால் நான் இப்போது வியாபாரம் செய்கிறேன்' என பிரசாத் எங்களிடம் தெரிவித்தார்.

பிரசாத் சிறுவனாக இருந்தபோதே, அவனது தந்தையார் சுகவீனத்தினால் இறந்துவிட்டார். நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானமாகக் கிடைப்பதாகவும் இந்தத் தொகையினைக் கொண்டு தாம் வாழ்க்கையை ஓட்டுவதாகவும் அவன் கூறுகிறான்.

குடும்பத்தின் உணவு, தங்குமிடம் மற்றும் கல்விச் செலவுக்கு இந்தப் பலசரக்குக் கிடையினால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு இவனது குடும்பத்தினர் சமாளிக்கிறார்கள்.

மந்த கதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுவரும் இந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்புகிறது. தங்களது வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் வியாபாரமே என இப்பகுதி வியாபாரிகள் கருதுகிறார்கள்.

யாழ் கண்டி நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்கும் மக்களின் தொகை அதிகரித்திருப்பதனால் கிளிநொச்சிச் சந்தைக்கு வந்து செல்வோரது தொகையும் அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக வியாபாரம் வழமையினை விட முன்னேற்றம் கண்டிருக்கிறது.

யாழ்ப்பாணமாக இருக்கலாம் அல்லது திருகோணமலையாக இருக்கலாம், வடக்குக் கிழக்கின் நகரங்களிலுள்ள நிலைமை இதுதான். ஒரு காலத்தில் பதுங்கு குழிகளும் காப்பரண்களும் நிறைந்துகிடந்த இந்த பகுதிகளில் தற்போது வர்த்தகம் புதுவேகம் கண்டிருக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டினைப் பொறுத்தவரையில் பொருட்களின் விலைவாசி பெரிதும் குறைந்திருப்பதாக யாழ் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஆர். ஜெனாகுமாரன் தெரிவிக்கிறார்.
'யாழ்ப்பாணத்தில், குறிப்பிட்ட சில பொருட்கள் பொறிக்கப்பட்ட விலையிலும் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. குடாநாட்டுக்கான மக்களின் வருகை என்றுமில்லாதவாறு அதிகரித்திருப்பதனால் சிறு வியாபாரச் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன' என அவர் தொடர்ந்தார்.

இது தவிர யாழ் குடாநாட்டின் உற்பத்திகளுக்கு பெருமளவு கேள்வி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 'யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கென்றே பலர் குடாநாட்டுக்கு வருகிறார். குறிப்பாக பனம்பெருள் உற்பத்திகளை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்' என ஜெனாகுமாரன் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், போரின் பின்னர் வர்த்தக நடவடிக்கைகள் தற்போதுதான் புதுவேகம் கண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர் குடாநாட்டில் பாரிய முதலீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தெற்கிலிருந்து பெருந்தொகையானோர் குடாநாட்டுக்கு வருகை தருவதால் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகள் மேலோங்கிக் காணப்படுவதாக நகரிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் ஜெகன் கூறுகிறார்.

'நகரத்தின் எல்லாப் பகுதியிலும் மக்கள் செறிந்திருப்பதை நீங்கள் காணலாம். இவ்வாறு நகரத்திற்கு அதிக மக்கள் வந்து செல்வது எமது வர்த்தகத்தினை வளப்படுத்தும்' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

திருகோணமலை:

உலகின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கும் திருகோணமலை நாட்டினது கிழக்குக் கரையோரத்தின் இரத்தினம் எனலாம். தொழில்துறை மற்றும் உல்லாசப் பயணத்துறை ஆகியன இங்கு செழிப்புற்றுக் காணப்படுகின்றன.

இவை தவிர, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலும் வன்முறையும் நிறைந்திருந்த பகுதியாகவும், நீதிக்குப் புறம்பான கொலைகள் மலிந்துகிடக்கும் இடமாகவும், அடிக்கடி இனக்கலவரம் வெடிக்கும் பிரதேசமாகவும் திருகோணமலை விளங்குகிறது.

இங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் அச்சத்துடன் இருக்கும் அதேநேரம் இன்னொரு பகுதியினர் நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

'தற்போது நிலமைகள் சீராகிவிட்டன' என ஒப்பந்தகாரர் ஒருவர் குறிப்பிட்டார். 'வேறுபட்ட ஆயுதக் குழுக்களுக்கு கப்பம் வழங்கியவாறு எங்களது கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது' என்றார் அவர்.

தற்போதைய சூழமைவில் நான் எந்த நேரத்திலும் வேலைக்குச் செல்லமுடியும். கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலிருந்து இரவு 11க்குக் கூட எந்தவித அச்சமுமின்றி என்னால் வெளியே செல்ல முடிகிறது.

முன்னர் இருந்த சூழமைவில், ஆறு மணிக்கு முன்னர் நான் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால் எனது வீட்டார் கவலையடைய ஆரம்பித்து விடுவார்கள்.

இனக்கலவரம் தந்த நினைவுகள்:

பாதுகாப்புக் கருதி இவர் தனது பெயரினைக் குறிப்பிட விரும்பவில்லை. தந்தையார் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டபோதும், தமிழரான இவர் தனது வாழ்நாள் முழுவதும் திருகேணமலையிலேயே வசித்துவருகிறார்.

திருகோணமலையிலேயே நீண்ட காலமாக வசித்துவரும் இன்னொருவர் வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கிறார். திருகோணமலை வர்த்தக சமூகத்துடன் இணைந்து செயற்படும் இவர் ஒரு வர்த்தகர். 'நான்குமுறை நான் எனது வியாபாரத்தினை இழந்தேன். எதிர்ப்புக்களின் மத்தியிலேயே நாங்கள் எங்களது வாழ்க்கையைத் தொடர்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.

திருகோணமலை நகரில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த இனக்கலவரத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை அவர் எங்களிடம் காண்பித்தார். குறிப்பிட்ட இந்தத் தமிழரது கடை அடங்கலாக எண்ணற்ற வியாபார நிலையங்கள் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் எரித்து அழிக்கப்பட்டது.

எங்களுக்குக் காட்டப்பட்ட ஒளிப்படத்தில் கட்டடம் முற்றாக எரிந்து அழிந்திருந்தது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடித்து நெருக்கப்பட்டிருக்கிறது, கணனிகள் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்தச் சம்பவங்கள் அப்போது கொழும்பு ஊடகங்களில் பெரிதாக வெளிவந்திருக்கவில்லை.

'சிறுபான்மையினருடன் தொடர்புடைய விடயம் இதுவென்பதால் இந்தப் பிரச்சினையினை எவரும் பெரிதாக எடுக்கவில்லை. எந்தக் கணத்திலும் எங்களது இறகுகள் ஒடிக்கப்படலாம் என நாங்கள் உணர்கிறோம்' என அந்த தெரிவித்தார்.

எது எவ்வாறிருப்பினும் திருகோணமலையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது என்ற உண்மையினை எவரும் மறுக்க முடியாது.

நிகேல் குமாரசுவாமி என்பவர் கொழும்பினைத் தளமாகக் கொண்ட முன்னணித் தொழிலதிபர். இவரது துணைவியாருக்கு திருகோணமலையின் நிலாவெளிப் பகுதியில் காணி இருக்கிறது.

இந்த தொழிலதிபர் தற்போது தனது துணைவியாரின் காணியில் Pigeon Island Beach Resort என்ற முதல்தர விடுதியினைக் கட்டி வருகிறார். இந்த விடுதி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து புறா மலையினைப் பார்க்கமுடியும்.

'இந்த நிலத்தினையும் விடுதியினையும் கொள்வனவு செய்வதற்குப் பலர் முண்டியடிக்கிறார்கள். ஆனால் நான் இதனை விற்கமாட்டேன். இது மகனுக்கே உரித்தானது' என அவர் சிரித்தவாறு எம்மிடம் குறிப்பிட்டார். நிகேல் குமாரசுவாமியின் மகனுக்குத் தற்போதுதான் மூன்று வயது.

தூர நோக்கோடு நீண்ட கால அடிப்படையிலேயே திரு. குமாரசுவாமி இந்த முதலீட்டினைச் செய்கிறார். இந்தக் கட்டடம் அவசர தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஒரு விருந்தினர் விடுதியன்று.

மாறாக ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருத்திகள் [Fittings] மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான கதவு மற்றும் யன்னல்களுடன் கூடிய சர்வதேச தரத்திலமைந்த ஒரு விடுதியாக இது அமையும்.

கதவுகள், யன்னல்கள மற்றும் மாடிப் படிகளின் இரு கரையிலும் இருக்கும் கட்டமைப்புகள் என்பன யாழ்ப்பாணத்திலிருந்து தனித்துவமாகத் தருவிக்கப்பட்டிருக்கிறன.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கையுடன் இருக்கும் இவர் இந்த விடுதி தனது மகனுக்குக் கிடைக்கப்போகும் பெரும் சொத்து என்றார்.

தொழிலதிபர் குமாரசுவாமி நிர்மானித்துவரும் இந்த விடுதிக்கு அடுத்ததாக இருக்கும் ஒரு விடுதி எரித்து அழிக்கப்பட்டிருக்கிறது. கப்பம் வழங்க மறுத்தமையினால் துணை இராணுவக் குழுக்களே இந்த விடுதியினை எரித்து அழித்திருக்கிறார்கள்.

கரையோர நகரத்தில் துணை இராணுவக் குழுக்கள் கப்பம் கோரும்போது வழங்க மறுத்தால் இதுதான் நடக்கும் என்ற நிலையே இருந்துவந்தது. ஆனால் தற்போது அவ்வாறில்லை என்கிறார் குமாரசுவாமி.

சர்வதேச தரத்திலமைந்த இதுபோன்றதோர் விடுதியினை அமைப்பதற்காக அவர் திருகோணமலைக்குத் தொழில் வல்லுனர்களையும் தேவையான மூலப்பொருட்களையும் கொண்டுவந்திருக்கிறார்.

விடுதியினைக் கட்டும் திட்டம் முழுமையடையும் இந்தத் தறுவாயில், இந்தக் கட்டுமானப் பணிகளின் பொது முகாமையாளராகச் செயற்படும் மர்லோன் மெண்டிஸ் கட்ட நிர்மாணப் பணி தொடர்பாக ஆச்சரியமடைகிறார்.

கடந்த சனவரி 26ம் திகதி தொடக்கம் 74 நாட்களாக நாங்கள் இங்கு முழுமூச்சுடன் வேலை செய்து வருகிறோம். 'சுசந்திகாவினைப் போல' ஓடியாடி வேலைசெய்யுமாறு மெண்டிஸ் ஒரு வேலையாளை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார்.

'மாணவர் விடுதியில் உள்ளவர்களுக்கு முட்டை விற்பவனாகவே நான் எனது வாழ்க்கையினை ஆரம்பித்தேன்' எனக் கூறிய மர்லோன் மெண்டிஸ் தற்போது சர்வதேச தரத்திலமையும் இந்த விடுதியினை நிர்வகித்து வருகிறார். சிங்களவரான மெண்டிசின் ஒரு மகன் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

சிறிலங்காவினைத் தான் நேசிப்பதால் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதாகக் கூறுகிறார். கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 80 பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள், ஏனையோர் உள்ளூர்வாசிகள்.

வேலையின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்காக குமாரசுவாமி தெற்கிலிருந்து கட்டத் தொழிலாளர்களை வரவழைத்திருக்கிறார். இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம்தான்.

சமூகத்தின் கருத்து:

'இந்தப் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் மக்களின் வாழ்க்கையில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை' என திருகோணமலையினைச் சேர்ந்த அந்த வர்த்தகர் தெரிவித்தார்.

'கட்டடத் தொழில் வல்லுனர்கள் இங்கில்லை எனக்கூறுவது ஒரு சாட்டு. பாலங்கள் மற்றும் வீதிகளை நிர்மானப்பதற்கான அனைத்து ஒப்பந்த காரர்களும் கொழும்பினைச் சேர்ந்தவர்களே.

திருகோணமலைப் பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் தொடர்பாக இவர்கள் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. எங்களுக்கான அனைத்து வாய்ப்புக்களையும் நாங்கள் இழந்துவிடுவோமோ என அஞ்சுகிறோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலைப் பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான வல்லுனர்கள் இல்லை என்பதை இவர் மறுக்கவில்லை. ஆனால், உள்ளூர் மக்களை ஏன் பயிற்றுவிக்கமுடியாது என இவர் கேள்வி எழுப்புகிறார்.

அரசாங்கம் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் ஊடாக இந்தப் பிரதேசங்களின் இன ரீதியான மக்களின் பரம்பலை முற்றாக மாற்றும் முனைப்புக்களின் அங்கமாகவே இந்தப் பகுதித் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக இவர் வாதிடுகிறார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தற்போதும் பலவழிகளில் தொடர்கிறது. வர்த்தக நோக்கங்களுக்காக எனக் கூறிக்கொண்டு இன்றும் சிங்களவர்கள் தெற்கிலிருந்து திருகோணமலையில் வந்து குடியேறுவதாக இவர் கூறுகிறார்.

ஆனால் சிறுவர்களையும் படையில் கட்டாயமாக இணைந்த விடுதலைப் புலிகளின் செயற்பாடே திருகோணமலை வாசிகள் மத்தியில் திறன்பொருந்திய தொழில் வல்லுனர்கள் குறைவாக இருப்பதற்காக காரணம் என ஒரு சிங்கள ஒப்பந்தகாரர் கூறுகிறார். போதிய கல்வி அறிவற்ற சமூகமே இங்கு இருக்கிறது என்கிறார் இவர்.

'விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல இளைஞர்கள் தங்களது கல்வியினையும் ஏன் வாழ்வாதரத்தினையும்கூட இழந்து நிற்கிறார்கள்.

சிறுவர்கள் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டமையானது சமூகத்தில் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.

தங்களது அன்புக்குரியவர்களைப் பெற்றோர்கள் இழந்து நிற்கிறார்கள். தங்களது பிள்ளைகள் எந்த நேரமும் விடுதலைப் புலிகளால் கடத்தப்படலாம் என்பதால் மக்கள் நித்திரை இழந்தார்கள், இவர்களால் சுதந்திரமாகத் தொழில் செய்யமுடியவில்லை.

இரவில் ஏதாவதொரு சத்தத்தினைக் கேட்டால் தங்களது பிள்ளைகளையும் பிடித்துவிடுவார்;களோ என அஞ்சித் தவித்திருக்கிறார்கள்'  என இந்த ஒப்பந்தகாரர் தொடர்ந்து தெரிவித்தார்.

போர் தொடர்பான கருத்துக்கள்:

பிரச்சினைகளும் குழப்பங்களும் நிறைந்த அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை எவரும் மறுக்கமுடியாது. வீதிகள் மீளவும் அமைக்கப்படுவதற்கும் இந்த அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்தகாரர்கள் எந்த நேரமும் தங்கள் பணியினைச் செய்வதற்கும் ஏற்ற வகையில் நாட்டில் பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது.

'குடியரசு அதிபர் தேர்தலில் பின்னர் நான் எனது துணைவியாருடன் பேசினேன். ராஜபக்சவிற்கே தான் வாக்களித்ததாக எனது மனைவி கூறினார். நானும் அவருக்கே வாக்களித்தேன் எனக் கூறினேன். பயங்கரவாதத்தினை அவர் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தான் அந்த முடிவினை எடுத்ததாக எனது மனைவி கூறினார்' என்றார் அந்த ஒப்பந்தகாரர்.

இன வன்முறைகளின்போது தங்களது வியாபார நிலையங்களைத் தீக்கு இரையாகக் கொடுத்த வர்த்தகர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வேறு விதமாகச் சிந்திக்கிறார்.

'போர் மற்றும் அது முன்னெடுக்கப்பட்ட முறை ஆகியவை தொடர்பாக நாங்கள் பெரிதும் சலிப்படைந்துவிட்டோம். விடுதலைப் புலிகள் தொடர்பாகவே அல்லது அவர்களது ஆதரவாளர்கள் தொடர்பாகவே நாங்கள் இங்கு பேசவில்லை.

மாறாக, தங்களது சொந்த மக்கள் எனக்கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராப் பல்குழல் எறிகணை செலுத்திகள் பயன்படுத்தப்பட்டதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்' என்றார் இந்த வர்த்தகர்.

சூரியனும் உதிக்கிறது:

திருகோணமலையின் கரையோரத்தில் அதிகாலை வானில் சூரியன் தோன்ற ஆரப்பிக்கிறான். துறைமுகக் குடாப் பகுதி, பிறீமா ஆலையினை அண்டிய கடல்பகுதி மற்றும் கிண்ணியா வாவி ஆகியவற்றில் தனது கதிர்கள் தெறிக்க சூரியன் மெல்ல எழுகிறான்.

சவால்களும் வாய்ப்புக்களும் கலந்திருக்கும் ஒரு நாளுக்காக தமிழர்கள், சிங்களவர்கள் ஏன் முஸ்லீம்கள் என அனைவரையும் எந்தவித பேதமுமின்றித் தனது கதிர்களால் கதிரவன் மெல்லத் தட்டி எழுப்புகிறான்.

அந்த ஒப்பந்தகாரர் கூறியதைப் போல 'இங்கு அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, அமைதியைத் தவிர'.

தற்போது அமைதி மெல்ல மெல்லத் திரும்புகிறது. இந்த அமைதி கவலைகளும் பாரபட்சமும் நிறைந்ததாகவே இப்போதும் இருக்கிறது. ஆனால் முன்னர் இருந்ததைப் போல வன்முறையினையும் குழப்பத்தையும் தன்னகத்தே அது கொண்டிருக்கவில்லை.

கிழக்கு மாறிவருகிறது. உல்லாசப் பயணத்துறை மற்றும் தொழில்துறையின் நன்மைகளை அது பெற்றுவருகிறது. தெற்கினைச் சேர்ந்த உள்ளூர் உல்லாசப் பயணிகளின் வருகையும் மூதலீட்டாளர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது.

இந்த மாற்றத்தினால் உள்ளூர் வர்த்தகர்கள் நன்மையடையும் அதேநேரம் பெரிதும் கவலைப்படுகிறார்கள். சமூகத்தவர்களுக்கு இடையிலான பிரிவு தற்போது பேச்சளவில் மாத்திரமே இருக்கிறது.

'இங்குவாழும் அனைத்துச் சமூகத்தவர்களும் மற்றைய சமூத்தை மதித்து நடக்கவேண்டும் என நான் கருதுகிறேன்' என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வர்த்தகர் கூறுகிறார்.
மோதலும் வன்முறையும் முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால் இன்னமும் மாறாமல் இருக்கும் மனங்கள் மாறியே ஆகவேண்டும்.

[PERAMBARA is aimed at those living in Sri Lanka, as well as the Sinhala-speaking audiences living among the diaspora.]

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காகத் தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
அனைத்துலக நிபுணர்குழு அடுத்தவாரம் கொழும்புக்கு பயணம்
சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான்
கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளை பெருநிலப்பரப்புக்கு கொண்டு செல்கிறது அவுஸ்ரேலியா
ஐ.நா குழுவுக்கு நுழைவிசைவு: மோடிக்கு ஜெயலலிதா கடிதம் - கோவையில் உருவபொம்மை எரிக்க முயற்சி
ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்கா அரசுக்குள் பிளவை ஏற்படுத்தும் – கொழும்பு ஊடகம்
மகிந்தவுக்கு எதிரான பொதுவேட்பாளர் – இணக்கத்தை நோக்கி எதிர்க்கட்சிகள்
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
சிறிலங்காவில் சீனத் தலையீடு குறித்து இந்தியா கவலை - பிரிஐ
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறராம் மகிந்த – பீரிஸ் கடிதம்