|
|
| 10 அரசியல்கட்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி – பெரும்பாலானவை தமிழ்க்கட்சிகள் |
| [ புதன்கிழமை, 18 யூலை 2012, 06:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] |
சிறிலங்காவில் பத்து அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை தமிழ் அரசியல்கட்சிகளாகும்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு, பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
"சிறிலங்காவில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 64 அரசியல் கட்சிகளில் 10 கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு 3.6 மில்லியன் ரூபாவும், பத்மநாபா ஈபிஆர்எவ்எவ் 8 இலட்சத்து 75ஆயிரம் ரூபாவும், ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு 8 இலட்சம் ரூபாவும் ஆண்டுதோறும் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு 593,000 ரூபாவும், ஈபிஆர்எல்எவ்விற்கு 5 இலட்சம் ரூபாவும், ரெலோவுக்கு 490,000 ரூபாவும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணிக்கு 275,000 ரூபாவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 170,000 ரூபாவும், ஐதேகவுக்கு 49,000 ரூபாவும் ஆண்டுதோறும் வெளிநாட்டு நிதி உதவி கிடைத்துள்ளது.
தேர்தல் திணைக்களம் சமர்ப்பித்துள்ள இந்தத் தகவல்களின் படி ஆளும்கட்சி உள்ளிட்ட 43 அரசியல்கட்சிகள் வெளிநாட்டில் இருந்து எந்த நிதியையும் பெறவில்லை. நான்கு அரசியல் கட்சிகள் இன்னமும் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இந்த அரசியல்கட்சிகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், புலம்பெயர் சமூகத்தினர் பணம் அனுப்பியுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
|
|