|
|
| தேயிலை உற்பத்தி வீழ்ச்சி - ஏற்றுமதி இலக்கை குறைக்கிறது சிறிலங்கா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 06:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] |
சிறிலங்காவுக்கு அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைத் தேடித்தரும் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால் மேலும் பாதிக்கப்படும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் போதிய மழை பெய்யாததால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டின் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 5 மில்லியன் கிலோவினால் குறைவடையும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 325 மில்லியன் கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான ஏற்றுமதித் தடைகளால், பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால், மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடிகளால், அனைத்துலக சந்தையில் சிறிலங்காவின் தேயிலைக்கு கேள்வி குறைந்துள்ளது.
சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் 60 வீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கே இடம்பெறுகிறது.
ஈரானே, சிறிலங்கா தேயிலையின் மிகப் பெரிய கொள்முதல் நாடாகும்.
கடந்த ஆண்டு சிறிலங்கா 328.37 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்ததன் மூலம்,1.5 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றிருந்தது.
இந்த ஆண்டில், அதைவிட சற்று அதிகமான உற்பத்தியை எதிர்பார்த்து ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில், சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி 11.7 வீதத்தினால் குறைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
|
|